மல்லை சத்யா, மதிமுக கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர், சிறந்த பேச்சாளர், வாரிசுகள் மட்டுமே அரசியலில் நிறைந்து கிடக்கும் இக்கட்டத்தில் இளம் அரசியல்வாதிகளில் ஒருவராக பத்திரிக்கைகளில் கெளரவிக்கப்பட்டவர். எளிமையாகவும் இனிமையாகவும் பழகுபவர், பேச ஆரம்பித்தால் புள்ளிவிபரங்களும், தமிழும் துள்ளிவிளையாடுகின்றது.
கேள்விக்கணைகளால் நாம் அவரை துளைத்த போதும் சிக்கலான, சங்கடமான கேள்விகளையும் புன்னகையோடு எதிர்கொண்டு நிதானமாக தீர்க்கமாக பதிலளித்தார்...
நேரம் ஒதுக்கி தமிழ்வெளிக்கு செவ்வியளித்தமைக்கு திரு.மல்லை சத்யா அவர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றோம்...
இனி மல்லை சத்யா அவர்களுடனான செவ்வி
தமிழ்வெளி: வைகோ தோல்வி? யாரால் ஏன்? எப்படி?
மல்லை சத்யா: வைகோ தோல்வி அடையவில்லை, அவரது வெற்றி பறிக்கப்பட்டுள்ளது, அதிகாரத்தில் இருப்பவர்களாலும் அரசு இயந்திரங்களை முறையற்று பயன்படுத்தியதாலும், வாக்குபதிவு இயந்திர முறைகேட்டாலும், ஊழலாலும், பணத்தாலும் அவரது வெற்றி பறிக்கப்பட்டுள்ளது, வைகோ போட்டியிட்ட விருதுநகர் தொகுதியில் பதிவான வாக்குகளை விட எண்னப்பட்ட வாக்குகள் இருபத்திரண்டாயிரம் அதிகம் என்றால் எவ்வளவு தூரம் இதில் ஊழல் நடந்துள்ளது?
தமிழ்வெளி: இதை எதிர்த்து முறையிடலாமே?
மல்லை சத்யா: யாரிடம் முறையிடுவது? முறையிடும் நிலையிலா உள்ளது? தேர்தல் கமிஷனுக்கு செல்லலாமென்றால் தலைமை தேர்தல் அதிகாரி நவீன் சாவ்லா ஏற்கனவே தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்தவராலும் பாஜக போன்ற எதிர்கட்சிகளாலும் ஒரு பக்க சார்புடையவர் என குற்றம் சாட்டப்பட்டவர், நமது நீதிமன்ற நடைமுறைகளும் பரிந்துரைகளும் எவ்வளவு நியாயம் வழங்கும் என்பதும் நமக்கு தெரியும், ஜனாதிபதியும் காங்கிரஸால் நிறுத்தப்பட்டவர் இந்நியலையில் யாரிடம் முறையிட?
தமிழ்வெளி: மதிமுகவின் பலம் என்ன? பலவீனம் என்ன?
மல்லை சத்யா: மதிமுகவின் பலம் அனைவரும் அறிந்ததே, அது சொல்லி தெரிய வேண்டியதில்லை, அரசியலில் நேர்மை பொதுவாழ்வில் தூய்மை இலட்சியத்தில் உறுதி என்று வாழ்ந்து வரும் பொதுச்செயலாளர் வைகோ அவர்களே மதிமுகவின் பெரும்பலம்
கொள்கை உறுதிப்பாடில்லாத சுயநலத்தோடு கடந்த காலத்தில் செயல்பட்டு வெளியேறிய சில இரண்டாம் கட்ட தலைவர்களே மதிமுகவின் பலவீனம்.
தமிழ்வெளி: தேர்தல் முடிந்துவிட்டது ஆனாலும், ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் இருப்பவர்களே முரண்பட்டு பேசுவது ஏன்?
மல்லை சத்யா: அரசியலில் எப்போதும் ஒரே மேடையில் ஏறாத பாரதிய ஜனதா கட்சியும், கம்யூனிஸ்ட் இயக்கங்களும் ஈழத்தமிழர்களுக்காக ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் இணைந்து செயல்படுகின்றனர், எல்லா அரசியல் வேறுபாடுகளையும் தாண்டி தமிழினத்திற்காகத்தான் இணைந்து செயல்படுகின்றோம். இது தொடரும்.
தமிழ்வெளி: ஈழத்தமிழர்கள் பற்றி பேசும் போராடும் இயக்கங்கள் தமிழகத்திலே அகதி முகாம்களில் உள்ள ஈழத்தமிழர்களை பற்றி அவர்களின் நலன்களை பேசுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளதே.
மல்லை சத்யா: இது தவறான குற்றச்சாட்டு, மதிமுக தொடர்ந்து தமிழகத்தில் அகதி முகாம்களில் உள்ளவர்களின் உரிமைக்காகவும் நலனுக்காகவும் போராடுகிறது, இரண்டாண்டுகளுக்கு முன் என் தலைமையில் சட்ட மன்ற உறுப்பினர்கள் முகாம்களில் ஆய்வு நடத்தினர், சில மாதங்களுக்கு முன் கூட பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் முகாம்களுக்கு சென்று ஆய்வு உநடத்தினார், நாங்கள் தொடர்ச்சியாக தமிழக அரசை வலியுறுத்துகிறோம், இன்றைய சூழலில் தமிழகத்தில் முகாம்களில் உள்ளவர்களுக்கு பிறர் நேரடியாக உதவ இயலாத பல சிக்கல்களும், அனுமதி நடைமுறைகளும் உள்ளன, எனவே தமிழக அரசுதான் அவர்களுக்கு உதவ இயலும், இதற்காகவும் தொடர்ந்து மதிமுகவும் பொதுச்செயலாளரும் போராடுகின்றனர்.
தமிழ்வெளி: தேர்தலில் ஈழத்தமிழர் ஆதரவு இயக்கங்கள் இருந்த கூட்டணி தோல்வியை தழுவியதற்கு பணம் ஒரு காரணமென சொல்லப்படுகிறது, இதைத்தாண்டி எப்படி இன உணர்வை ஊட்டுவீர்கள்?
மல்லை சத்யா: மத்திய மற்றும் மாநில ஆளும் கட்சிகளின் வாக்கு எந்திர முறைகேடு, அரசாங்க இயந்திரம் தவறாக பயன்படுத்தப்பட்டது, அதிகார அத்துமீறல்கள், ஊழல் போன்றவற்றால் பறித்துக்கொண்ட வெற்றியை பெரும்பாலான மக்கள் பணம் வாங்கிக்கொண்டு வாக்களித்துவிட்டார்கள் என்று மக்களின் மீது பழி சுமத்தி அதன் மூலம் இவர்களின் முறைகேட்டையும் ஊழலையும் மறைப்பது.
மக்கள் இன உணர்வோடு இருக்கிறார்கள் அதனால் தான் மத்திய மாநில ஆளுங்கட்சிகளின் அத்துமீறல், அதிகாரம், வாக்கு எந்திர முறைகேடு, ஊழல், ஊடக பலம் என அத்தனையும் தாண்டி காங்கிரஸ்-திமுக அரசுக்கு எதிராக இரண்டு கோடிக்கும் மேற்பட்ட வாக்குகள் விழுந்துள்ளன, திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கும் அதிமுக கூட்டணிக்கும் இடையேயான வாக்குவித்தியாசம் சில இலட்சங்கள் மட்டுமே.எனவே மக்கள் இன உணர்வோடு தான் உள்ளனர்.
தமிழ்வெளி: ஸ்டாலின் துணை முதல்வர்? உங்கள் கருத்தென்ன?
மல்லை சத்யா: நடந்து கொண்டிருப்பது ஒரு குடும்பத்தின் ஆட்சி, மன்னராட்சி என்கிற போது வேறென்ன எதிர்பார்க்க முடியும்?
ஜெர்மனியிலே மார்கஸ் அவர்களின் சிந்தனையில் கருவானது கம்யூனிசம், தேசம் தாண்டி அது உருவானதும், வளர்ந்ததும் ரஷ்யாவில் லெனினால்,ஈரோட்டில் பிறந்த தந்தை பெரியாரின் அரசியல் வாரிசாக வந்தவர் தந்தை பெரியாரின் மகன் முறையான சொல்லின் செல்வர் ஈவிகே சம்பத் அல்ல, சம்பத் அவர்களின் மகனும் பெரியாரின் பேரனுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் கூட காங்கிரஸ் இயக்கத்தில் தலைவராக இருக்கிறாரே தவிர திராவிட இயக்கத்தில் அல்ல, பெரியாரின் வாரிசாக விளங்கியவர் காஞ்சிபுரத்தில் பிறந்த அறிஞர் அண்ணா, அண்ணா அவர்களின் வாரிசாக அவர்களின் மகன் டாக்டர் பரிமளம் வரவில்லை, அண்ணா அவர்களின் வாரிசு கலிங்கப்பட்டியில் பிறந்த தலைவர் வைகோ அவர்கள் தான். சொத்துகளுக்கு வேண்டுமானல் இரத்த வாரிசுகள் வரலாம் ஆனால் கொள்கைகளுக்கு அல்ல..
ஒரு குடும்பத்திற்காக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது, மன்னராட்சி நடக்கின்றது, ஆனால் மக்கள் அனைத்துயும் பார்த்துக்கொண்டுதான் உள்ளார்கள்.
தமிழ்வெளி: தமிழ்தேசியம் இன்றைக்கு தமிழகத்திலே பரவலாக பேசப்படுகிறது, நிறைய இளைஞர்களை ஈர்க்கின்றது, பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் பல இயக்கங்கள் தமிழ்தேசியத்தையே முன்னிறுத்துகின்றன, எழுபதுகளில் இருந்தது போன்று இப்போது திராவிட சித்தாந்தம் இல்லையே, திராவிடத்தின் தேவை தமிழகத்தில் முடிந்துவிட்டதா?
தமிழ்தேசியமும் திராவிடமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதா?
மல்லை சத்யா: தமிழ்தேசியமும் திராவிடமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதல்ல, திராவிடத்திலே உள்ளடங்கியுள்ளது தமிழ்தேசியம், அன்றைக்கு திராவிடம் பேசப்பட்டது இன்றைய தமிழ்நாட்டை மட்டும் வைத்து அல்ல, சென்னை மாகணம் அன்று ஆந்திரா கேரளா கர்நாடாக போன்ற திராவிட இனத்தை சேர்ந்த வேற்று மொழி பேசும் மக்களையும் உள்ளடங்கி இருந்தது. தொடக்ககாலத்தில் பல முண்ணனி திராவிட தலைவர்களும் இந்நான்கு மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருந்தனர், மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்ட பின் தமிழகத்திலே திராவிடம் என்பது தமிழக நலனை முன்னிறுத்துகிறது.
இந்தியாவிலே இரண்டு இனங்கள், ஒன்று திராவிட இனம், மற்றொன்று ஆரிய இனம், நம் திராவிட இனத்திற்கும் வடவர்களின் ஆரிய இனத்திற்கும் உடை, கலாச்சாரம், உணவு, நிறம் என வேறுபாடுகள் உள்ளன, ஆனால் திராவிட இனத்தில் உள்ள தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் தமிழ் மக்களிடையே மொழி என்பது ஒரே குடும்ப மொழி, உடை கலாச்சாரம் உணவு பழக்கங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை.
தமிழ்நாட்டிலே ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தமிழ் அல்லாத திராவிட மொழி பேசும் மக்கள், இவர்களை ஒதுக்கிவிட்டு எந்த அரசியலும் செய்ய முடியாது, தமிழனாக பிறந்துள்ளார்களா என்பதை விட தமிழனாக வாழ்கிறார்களா என்பதே முக்கியம். தமிழனாக பிறந்து தமிழுணர்வின்றி இருப்பவர்களை விட தமிழர்களாக இன உணர்வோடு வாழ்வதே முக்கியம்.








